சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கோழி முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கரோனா நிவாரணமாக 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள முட்டைகளை மாவட்ட ஆட்சியர் ராமனிடம் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ராமன் கூறுகையில், " கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை முழு ஊரடங்கு உத்தரவை முழுமையாகக் கடைப்பிடித்து வந்த மாவட்ட பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நாளை காலை 6 மணி முதல் 1 மணி வரை முந்தைய ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு கடைகள் செயல்படும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளைத் தவிர, மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறிச் சந்தைகள் செயல்படும்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. இன்று பெறப்பட்ட இந்த முட்டைகள் அம்மா உணவகங்களில் இலவசமாக இரண்டு வேளை உணவுடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "சேலத்தைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. மாவட்ட நிர்வாகம் முழுவீச்சுடன் வைரஸ் தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகிறது" என்றும் கூறினார்.
இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முட்டை வழங்கிய அமைச்சர்