முருகப்பெருமானின் தைப்பூச விழா இன்று (ஜனவரி 28) தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு பாவடி செங்குந்தர் ஸ்ரீகல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சுப்பிரமணியசாமிக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்துவந்து அபிஷேகம் செய்தனர். இதனை தொடர்ந்து ராஜா அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
இதேபோல ஊத்துமலை முருகன் கோயில், ஜங்ஷன் காவடி பழனியாண்டவர் கோயில், குமரகிரி பால தண்டாயுத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.