சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கரோனோ தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 3 வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும், தமிழ்நாடு அரசு ஊழியர் குடும்ப நல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் அலுவலக நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வெளிநடப்பு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் அர்த்தநாரி," மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் போராட்டத்தில் இறங்கி உள்ளது.
இதேபோல வரும் நவம்பர் மாதம் போராட்டம் நடைபெற உள்ளது . உடனடியாக தமிழ்நாடு அரசு எங்கள் சங்க மாநில நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனோ தடுப்பு பணியில் தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள், ஊழியர்கள் முனைப்புடன் பணி செய்து வருகிறோம்.
எனவே எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலரை மிரட்டிய வருவாய் அலுவலர்