பள்ளிக் கல்வித் துறை சார்பாக 17 வயதிற்குள்பட்டவர்களுக்கான 65ஆவது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் நடைபெற்றது. இம்மாதம் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழ்நாடு அணி பங்கேற்றது. அந்த அணியில் சேலம் குகை பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் மாணவி சத்விகாவும் இடம்பெற்றிருந்தார்.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்றது. தேசிய அளவிலான போட்டிகள் முடிந்து இன்றைய தினம் சேலம் திரும்பிய வீராங்கனை சத்விகாவுக்கு அப்பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு சத்விகாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த வெற்றி குறித்து சத்விகா பேசுகையில், "40 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் தங்கம் வென்ற தமிழ்நாடு அணியில் இடம்பெற்றிருந்தது பெருமையாக உள்ளது. இறுதிப்போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் சரவணனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: 400ஆவது போட்டியில் களமிறங்கிய கோலி; சோதனையில் முடிந்த சாதனை!