சேலம்: புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், தமிழ்நாடு காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த 'துப்பாக்கிகள் கண்காட்சி'யை ஏராளமான பொதுமக்கள் இன்று (டிச.3) கண்டுகளித்தனர். தமிழ்நாடு காவல்துறையில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றவாளிகளை பிடிப்பதற்காகவும், பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்காக காவல்துறையில் பல்வேறு அதிநவீன ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு காவல்துறையில் குற்ற சம்பவங்களின் போது பொதுமக்களை பாதுகாக்கவும், அதேநேரம் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும் துப்பாக்கி ரகங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை தவிர, பிற ஆயுதங்களும் பயன்பாட்டில் உள்ளன. போலீசார் பயன்படுத்தும் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதிய பேருந்து நிலையத்தில் புத்தகத் திருவிழா நுழைவாயிலில் சேலம் மாநகர காவல்துறை சார்பில் தமிழ்நாடு காவல்துறையில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட உயர்ரக அதிநவீன துப்பாக்கிகள் அதில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் குறிப்பாக ரப்பர் புல்லட், பிளாஸ்டிக் புல்லட் என 20-க்கும் மேற்பட்ட புல்லட் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இதனை கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வியப்புடன் பார்த்தனர். இதைத்தொடர்ந்து, காவல்துறை பதவிகள் மற்றும் அதற்கான சின்னங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP), காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (ADGP), காவல்துறைத் தலைவர் (IGP), காவல்துறை துணைத்தலைவர் (DIG), காவல்துறை கண்காணிப்பாளர் (SP), காவல் ஆய்வாளர் என்பன குறித்த விளக்கம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: காஷ்மீர்: 12 இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை!