சேலம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்த நிலையில், வழக்கை விசாரிக்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், "கடந்த ஆண்டு தீபாவளி நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்து இருந்தார். அந்த பேட்டியில், இந்து கலாசாரத்தை அழிப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளன என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக நான் விசாரித்த போது, டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் அர்ஜுன் கோபால் என்பவர் என தெரியவந்தது. அவரது பின்புலம் பற்றி விசாரித்தபோது, அவர் இந்து சமூகத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. எனவே அண்ணாமலை வேண்டுமென்றே இருமதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு பொய்யான தகவலை பரப்பி விட்டுள்ளார்.
எனவே அவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ,505 மற்றும் 120 ஏ ,சிஆர்பிசி பிரிவு 156(3), ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சமூக ஆர்வலர் பியூஷ், சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், இதுசம்பந்தமாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் அரசின் அனுமதியை வாங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் பியூஸ், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திற்கு அந்த புகார் மனுவை அனுப்பி வைத்து அனுமதி கேட்டார். பின், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அந்த மனுவினை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த மனுவை அரசு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ததில், இதுதொடர்பாக வழக்குபதிவு செய்வதற்கான காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டது.
எனவே வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தலாம் என தெரிவித்ததை அடுத்து தமிழக ஆளுநர் இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி, சேலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பியூஸ் கூறுகையில், "ஒரு வருடத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதினேன். தற்போது தான் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக விரைவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, சேலம் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்படும். ஆனால் அதற்கு முன்னதாக அண்ணாமலை 'ஸ்டே ஆர்டர்' வாங்க முயற்சிப்பார் என்று தெரிகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!