பெரியார் பல்கலைக்கழகத்தின்கீழ் தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன.
இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.
முதலாமாண்டு, இரண்டாமாண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு எழுதாமலேயே அவர்கள் தேர்ச்சிப்பெற்றதாக உயர் கல்வித் துறை அண்மையில் அறிவித்திருந்தது.
இதனையடுத்து மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆறாம் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆறாவது செமஸ்டர் தேர்வு தற்போது நடைபெற்றுவருகிறது.
இதற்கான வினாத்தாள் ஆன்லைன் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்றும் மாணவர்கள் இருந்த இடத்திலிருந்தே ஆன்லைன் மூலம் தேர்வு எழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தையடுத்து மாணவர்கள் இன்று காலை தேர்வு எழுத தயாராகினர். இதில், ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இங்கிலீஷ் பார் கமிட்டி யூ-ட்யூப் எக்ஸாமினேஷன் என்ற பாடத்திற்குத் தேர்வு நடைபெற இருந்தது.
வினாத்தாள் 75 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்றும், ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் எனத் தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக வினாத்தாள் மாற்றியமைக்கப்பட்டு இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் அடிப்படையாகக் கொண்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. ஆன்லைனில் வினாத்தாளைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தேர்வெழுதும் மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் புகாரளித்தனர். இதனால் காலை 10 மணிக்கு நடைபெற வேண்டிய தேர்வுகள் உடனடியாக ரத்துசெய்யப்பட்டது.
மேலும், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வினாத்தாளை பரிசீலனை செய்து மதியம் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி மதியம் 2 மணிக்கு திருத்தியமைக்கப்பட்ட வினாத்தாள் மூலம் ஆன்லைன் தேர்வு நடைபெற்றுவருவதாக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: கேகேஆர் vs மும்பை இந்தியன்ஸ்..! ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்