தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்கள் நடித்து ஒரு திரைப்படம் திரைக்கு வரும்போது, அவர்களது ரசிகர்கள் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்களை வைத்து வண்ண வண்ண தோரணங்களைக் கட்டி பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில், முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து தற்போது திரைக்கு வந்துள்ள காப்பான் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு விடுத்திருந்த அறிக்கையில், தனது திரைப்படம் வெளியாகும்போது டிஜிட்டல் பேனர்களை வைப்பதை முற்றிலுமாக கைவிட்டு அதற்கான பொருட்செலவில் ஏழை, எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
சேலத்தில் இன்று வெளியான காப்பான் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் சேலம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேக் வெட்டிக் கொண்டாடினர். அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட திரையரங்கில் டிஜிட்டல் பேனர்களை வைக்காமல், வெறும் தோரணங்கள் மட்டுமே அந்தத் திரையரங்கில் கட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து திரைப்படம் முடிந்து வெளியேவந்த பொதுமக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் 700 மரக்கன்றுகள் வழங்கினர்.
சென்னையில் டிஜிட்டல் பேனர் விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ சிக்கி உயிரிழந்த சம்பவத்தையடுத்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது சூர்யா ரசிகர் மன்றத்தினர் அதனை முதன்முதலாக செயல்படுத்தியுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.