சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது, அம்மம்பாளையம். இங்கு உள்ள தனியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில், 'ரீச் அகடாமி' என்கிற பெயரில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் ஆத்தூர் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 226 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இதில் 53 மாணவர்கள் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நகை ஆசாரி முருகனின் மகன் சந்துரு (19) என்கிற மாணவன் இன்று காலை நீட் பயிற்சி வகுப்புக்குச் சென்றவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்று வருவதாக சக மாணவர்களிடம் கூறி விட்டு, அவர் தங்கியிருக்கும் விடுதி அறைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சந்துருவுடன் விடுதியில் தங்கியிருக்கும் மாணவன் பாலாஜி விடுமுறைக்கு, தன் வீட்டிற்குச் சென்று விட்டு இன்று (மார்ச் 27) காலை விடுதி அறைக்கு வந்துள்ளார். அப்போது அறையின் உள்ளே மாணவன் சந்துரு உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து மாணவன், விடுதி வார்டன் பிரவீன் குமாருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர் விடுதி வார்டன் ஆத்தூர் ஊரக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மாணவனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தடயவியல் நிபுணர்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்விற்காக படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கார்மேகம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் பள்ளி நிர்வாகத்திடம் மற்றும் உயிரிழந்த மாணவனின் பெற்றோர், சக மாணவர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாணவன் சந்துரு 12ஆம் வகுப்பு வரை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்ததும், பின்னர் நீட் தேர்விற்காக அதே பகுதியில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து இரண்டு முறை தோல்வியடைந்ததும், மூன்றாவது முறையாக ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் ரீச் நீட் மையத்தில் படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் நாற்காலி, கயிறு போன்ற பொருட்களை அவர் தங்கியிருக்கும் விடுதி அறைக்கு எடுத்து வருவதும், பின்னர் கதவை மூடிக்கொள்வதும் விடுதி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது சிசிடிவி கேமராவில் பதிவான மாணவன் சந்துருவின் வீடியோ மற்றும் படங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். நீட் தேர்வு அச்சத்தால் 19 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தருமபுரியில் பயங்கரம்; சொத்து தகராறில் மகனை ஓட ஓட வெட்டிய தந்தை - பதறவைக்கும் சிசிடிவி காட்சி