சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமை திங்கள்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளான இன்று கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரில் முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.
மேலும் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விழா மேடையில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களில் தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று விழா மேடையில் முதலமைச்சர் உறுதியளித்தார். இதையடுத்து முதியோர் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளில் ஏழு பேரை தேர்வு செய்து உடனுக்குடன் ஓய்வூதியத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கடந்த 2 நாட்களில் மட்டும் நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்களில் கலந்து கொண்டு 13 ஆயிரத்து 296 பேர் மனுக்களை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.