சேலம் மாநகர காவல்நிலையங்களில் பெண் வரவேற்பாளர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று அந்த மனுக்களை விவரங்களாக கணினியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு அனுப்புவதுதான் அவர்களது பணி. இதேபோன்று சேலம் மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் வரவேற்பு காவலர்கள் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு சார்பில் புகார் மனுக்களை பெற்று அவற்றைப் பதிவு செய்து கண்காணிக்கும் பணியில் பெண் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர், தன்னிடம் வரும் பொதுமக்களின் புகார் மனுக்களை காலம் தாழ்த்தி பதிவு செய்வதாகவும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக முருகேஸ்வரி என்ற பெண் காவலர், காவல் ஆய்வாளரிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்னொரு காவலர் அம்சவள்ளி என்பவர் இந்த விவகாரங்களை எல்லாம் ஏன் காவல் ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கின்றனர் என்று கேள்விகேட்டு முருகேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி போக ஆபாசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் கடுமையாக வசைபாடிக் கொண்டனர். இதனை மற்ற காவலர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
ஆனால், இவர்கள் இருவரும் மற்ற காவலர்கள் கூறுவதைக் கேட்காமல், ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு தரையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர் . இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த சூரமங்கலம் காவல் நிலையமே அதிர்ந்து போனது. இதனையடுத்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமாருக்கு சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல் ஆணையர் செந்தில்குமார், தகராறுக்கு காரணமான அம்சவள்ளி என்ற பெண் காவலரை ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் .
காவல் நிலையத்திலேயே பெண் காவலர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் சேலம் காவல்துறை அலுவலர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.