சேலம் ஓமலூர்பழையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைசாமி, பெருமாயி தம்பதியினர். இவர்களுக்கு வினோத் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.2010ஆம் ஆண்டு துரைசாமி குடும்பத்துடன் ஈரோட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களது மகன் வினோத் தொலைந்துவிட்டார்.
இதன்பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்களால் வினோத் ஒப்படைக்கபட்டார். பாதுகாப்பு மையத்திலிருந்து பெற்றோர் சேலத்திற்கு அழைத்துவரும் வழியில் மீண்டும் தொலைந்து விடுகிறார் வினோத். இதனையடுத்து வினோத் பெற்றோர், அவரை பல இடங்களிலும் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனிடையே கடந்த சில வருடத்திற்கு முன்பு அவரது தந்தை துரை இறந்து விடுகிறார்.
இந்நிலையில் தொலைந்துபோன சிறுவன் வினோத்குமார் ஈரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். எட்டாம் வகுப்பு வரையில் ஈரோட்டிலும், பின் ஒன்பதாம் மற்றும் பத்தாம்வகுப்புகளை தருமபுரியிலும் படித்துள்ளான். பின்னர் உயர் கல்வியை சென்னையில் படித்து முடித்துள்ளான்.
இந்நிலையில் தனது பெற்றோர் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வினோத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதன்பின், காப்பக நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு வினோத் குமார் பெற்றோரை சேலத்தில் தேடி அலைந்து உள்ளார். ஒரு வார காலம் தேடலுக்குப்பின் காப்பகத்தின் உதவியுடன் தாயின் இருப்பிடத்தைகண்டுபிடித்தார் வினோத்.
ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் மகனைப்பார்த்த மகிழ்ச்சியில் தாய் ஆனந்தக்கண்ணீரை வெளிப்படுத்திய இச்சம்பவம் அப்பகுதியினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.