சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் (ஜூன் 28) காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த முன்னாள் எம்.பி.யும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அர்ஜுனனுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், அந்தச் சம்பவம் குறித்து அர்ஜுனன் சேலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஓமலூர் அருகில் உள்ள எனது விவசாயத் தோட்டத்திற்கு சென்று வீடு திரும்பியபோது, காவல் துறையினர் சிலர், எனது காரை நிறுத்தி இ-பாஸ், அடையாள அட்டை கேட்டனர். அதற்கு நான் முன்னாள் எம்.பி. என்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்றும் தெரிவித்தேன்.
ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து என்னை அங்கே இருந்து சேலம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மீண்டும் மீண்டும் விசாரித்தனர்.
அப்போது அங்கு வந்த சிலர் வேண்டுமென்றே என்னிடம் தகராறு செய்தனர். அதனால் காரிலிருந்து இறங்கி வந்தபோது காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டார்.
இதனால் அவரிடம் நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அதன் பின்னர் காரில் ஏறிய பிறகும் என்னிடம் தகராறு செய்ததால் அவர்களைக் கண்டித்தேன்" என்றார்.
அர்ஜுனன் தருமபுரி மக்களவைத் தொகுதியில், 1980இல் திமுக சார்பில் வெற்றிபெற்றார். அதன் பிறகு சேலம் மாவட்டம் வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.