சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அடுத்த பெரியசோரகையில் இருக்கும் அருள்மிகு சென்றாயபெருமாள் கோயில் குடமுழுக்கு விழா இன்று (நவ.19) வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் பங்கேற்றார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, முதலமைச்சருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து குடமுழுக்கையொட்டி நடைபெற்ற யாக பூஜைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.
விழாவின் முக்கிய நிகழ்வான கோபுர கலசங்கள், கொடிமரத்திற்கு காவிரி புனித நீருற்றும் கும்பாபிஷேகத்திலும் முதலமைச்சர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பெரியசோரகை சென்றாயபெருமாள் கோயில் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 7 மாதங்களாக கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது அரசு கட்டுப்பாடுகளுடன் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:சி. பொன்னையன் தலைமையில் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தரங்கு