சென்னை: தொலைபேசி, மின்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட சேவைத் துறைகள் பல்வேறு சீரமைப்பு பணிகளுக்காக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் மேற்கொள்ளும் பள்ளம் தோண்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையிலான பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் 30ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் சேவைத்துறைகள் மூலம் பல்வேறு சீரமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 18 மாவட்டங்களை குறிவைத்துள்ள கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மேலும், இந்த தடை காலங்களில் அவசரத் தேவைகளுக்கு மட்டும் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை மேற்கொள்ள, சென்னையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள துணை ஆணையர் மற்றும் வட்டார துணை ஆணையர்கள் ஆகியோரின் மூலமாக ஆணையாளரின் முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, இந்த தற்காலிக தடை உத்தரவு குறித்து அனைத்து சேவைத் துறைகளுக்கும், சாலைகளில் பள்ளம் தோண்டும் பணியை நாளை மறுநாள் (செப்.30) முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் நிறுத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்