சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாதிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த வாரம் முன்பு திரையரங்குகளில் வெளியானது. கிரிக்கெட் போட்டியில் மாமனார், மாப்பிள்ளை இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகராக தினேஷ் "கெத்து" என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் படத்தின் கிளாசிக் பாடலான 'நீ பொட்டு வச்ச தங்கக்குடம்' பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லப்பர் பந்து படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பின்னர், தேமுதிக தலைவர் பிரேமலதா மற்றும் அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரேமலதா பேசுகையில், “லப்பர் வந்து திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் வந்து கேப்டனின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தி விட்டு, எங்களிடம் பேசி இருந்தனர். அப்போது 'லப்பர் பந்து' படத்தை கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த படத்தை நாங்கள் கேப்டன் விஜயகாந்திற்கு அர்ப்பணித்து இருக்கிறோம் என்று கூறினர்.
இன்றைக்கு தான் லப்பர் பந்து படத்தை பார்த்தோம். படத்தில் கேப்டனின் தாக்கம் அதிகமாக இருந்தது. கேப்டனின் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என அனைவரும் இந்த படத்தை கொண்டாடி பார்ப்பார்கள். இந்த திரைப்படத்தில் உழைத்த அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்.
கிரிக்கெட் இளைஞர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால் இப்படம் இன்னும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும். கேப்டனின் 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' பாடல் இப்போது எங்கும் வைரலாகி வருகிறது. இனி வரப்போகிற ஐபிஎல் தொடரில் கூட தோனிக்கு கேப்டன் விஜயகாந்தின் பாடலைத் தான் போட்டு வரவேற்பார்கள். பொதுவாக ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்’ பாடல் எங்கள் கட்சிக் கூட்டங்கள், பிரசாரங்கள் என எல்லா இடங்களிலும் ஒலித்தது. கேப்டன் எங்கு சென்றாலும் இந்த பாடல் தான் அதிகமாக ஒலிக்கும்.
இதையும் படிங்க: டிடிஎஃப் வாசன், பூனம் பஜ்வா, குரேஷி... பிக்பாஸ் 8இல் விறுவிறுப்பை கூட்டப் போகும் போட்டியாளர்கள் யார்? - Bigg boss season 8 tamil
அந்த பாடலை இந்த படத்தில் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த பாடல் இப்படத்தின் மூலம் இன்னும் கொண்டாடப்படுவதில் கூடுதல் மகிழ்ச்சி. கேப்டன் மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படங்களிலும் கேப்டனின் புகைப்படங்கள், போஸ்டர்கள் அதிகமாக இடம்பெறும். அது போல திரைப்படங்களில் கேப்டனின் பாடல், போஸ்டர்களை யார் பயன்படுத்தினாலும் காப்புரிமை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்து அல்ல, மக்களின் சொத்து” என கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்