ஹைதராபாத்: கர்ப்ப காலத்தில் 7 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குவதால், குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாகலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாகவே கர்ப்ப அசௌகரிகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ஹார்மோன்கள் மாற்றங்கள் மற்றும் பிற காரணிகளால் கர்ப்பிணிகள் தூங்குவதில் சிக்கல் இருக்கும்.
ஆய்வு: இந்த நிலையில், தாயின் குறுகிய கால தூக்கம் குழந்தையை பாதிக்குமா? என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் இரவு 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதை குறுகிய கால தூக்கம் (SSD - Short Sleep Duration) என்று வரையறுக்கப்படுகிறது. அதன்படி, ஆராய்ச்சியாளர்கள் சீனாவில் உள்ள 3 வெவ்வேறு மருத்துவமனைகளில் இருந்து 7 ஆயிரத்து 59 தாய்சேய்களின் தூக்க தரவை பகுப்பாய்வு செய்தனர்.
தாய் கர்ப்ப காலத்தில் குறைவான தூக்கத்தை மேற்கொண்டதால், 6 மாதம் முதல் 3 வயது வரையில் குழந்தைகளுக்கு வளர்ச்சி தாமதப்படுவதையும் கவனித்தனர். கருவின் இன்சுலின் சுரப்புக்கான நிலையான குறிகாட்டியான தண்டு இரத்த சீரம் சி-பெப்டைட் அளவுகளின் பங்கையும் அவர்கள் மதிப்பீடு செய்தனர்.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் எடை அதிகரிப்பு.. ஆய்வு முடிவு சொல்வது என்ன?
ஆய்வின் முடிவு: ஆய்வின் முடிவில் கர்ப்ப காலத்தில் போதிய தூக்கம் இல்லாததால், குழந்தைகளுக்கு நரம்பியல் வளர்ச்சியில் பிரச்னைகள், அறிவாற்றல், நடத்தை, கற்றல் திறன் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் ஆபத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் குறுகிய கால தூக்கம் என்பது தாயின் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தையும், கருவின் வளர்ச்சி சூழலையும் பாதிக்கும். தாயின் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் இன்சுலின் சுரப்பை பாதிக்கலாம். இதன் விளைவாக கருவின் நரம்பியல் வளர்ச்சியில் தாமதம் ஏற்படும் என இந்த ஆய்வு கூறுகிறது.
இதில் கிட்டத்தட்ட 40 சதவீத கர்ப்பிணிகளுக்கு குறுகிய கால தூக்கம் (SSD) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களுக்கு (IGT - Impaired glucose tolerance) பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை, இன்சுலின் எதிர்ப்பு, கர்ப்பக்கால நீரிழிவு மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு நரம்பியல் வளர்ச்சியில் தாமதம் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படலாம். மேலும் அவர்களின் குழந்தைகளின் உணர்ச்சி, நடத்தை, பேசும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம் என ஆய்வு குறிப்பிடுகிறது.
“இந்த ஆய்வு கர்ப்பிணிகளுக்கு தூக்கம் முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும் கருவுற்ற தாய்மார்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பை பற்றியும் எடுத்துரைக்கிறது” என சீனாவின் ஹெஃபியில் உள்ள அன்ஹுய் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் தலைவர் டாக்டர் பெங் ஜு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்