சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பழக் கடைகளில் வாழைப் பழங்களைப் பழுக்கவைப்பதற்கு ரசாயனம் கலந்த நீர் பயன்படுத்தப்படுகிறது என்று காணொலி ஆதாரத்தின் அடிப்படையில் நமது தளத்தில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியின் எதிரொலியாக இன்று உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சின்னக்கடை வீதி பகுதியில் உள்ள வாழைப்பழக் கடைகளை ஆய்வுசெய்தனர்.
அப்போது ரசாயனம் கலந்த நீரால் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் டன் கணக்கில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றைப் பறிமுதல்செய்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் செயற்கை முறையில் வாழைப் பழங்களைப் பழுக்கவைத்து விற்பனை செய்துவந்த கடைகளுக்குச் சீல்வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, திராட்சை, வாழைப் பழங்கள் என அனைத்து வகையான பழங்கள் விற்பனை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: சேலத்தில் வாழைத்தாருக்கு ரசாயனம் தெளித்து விற்பனை: காணொலி வைரல்
இந்தக் கடைகளுக்குத் தேவையான பழங்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்து, கொள்முதல் செய்யப்படுகின்றன. பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழங்கள், இங்கு உள்ள குடோன்களில் வைக்கப்பட்டு பின்னர் அவற்றை வாடிக்கையாளருக்கு கடை உரிமையாளர்கள் விற்பனை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் சின்னக்கடை வீதி பகுதியில் உள்ள வாழைப்பழக் கடையில் ரசாயனம் கலந்த நீர் தெளிக்கப்பட்டு வாழைப் பழங்கள் பழுக்கவைக்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதனடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சுருளி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு இன்று, சேலம் சின்னக்கடை வீதி பழக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் மூன்று கடைகளில் செயற்கையான முறையில் வாழைப் பழங்களை பழுக்கவைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சுமார் ஒன்றரை டன் வாழைப் பழங்களை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.75 ஆயிரமாகும். இவ்வாறு பறிமுதல்செய்யப்பட்ட வாழைப் பழங்கள் சேலம் மாநகராட்சி இயற்கை உரம் தயாரிக்கும் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மேலும் செயற்கையான முறையில் வாழைப் பழங்களைப் பழுக்கவைத்து மூன்று கடை உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006இன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: அதிரடியாக குறைந்த தக்காளி விலை- வேதனையில் விவசாயிகள்