தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் இந்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் சென்ற பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் காவல்துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டுமென சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும், சேலத்தின் முக்கிய பகுதிகளிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றுவருகிறது. தற்போது முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று (மார்ச் 1) சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள கந்தம்பட்டி பாலத்தில் சேலம் பறக்கும் படை குழுவினர் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேலம் மாவட்டம் தளவாய்பட்டியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார். அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரை சோதனை செய்ததில் வெள்ளி கொலுசு தயாரிக்கப் பயன்படும் 4 கிலோ 80 கிராம் வெள்ளி கம்பிகள் இருந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 3.24 லட்சமாகும். பறிமுதல் செய்த வெள்ளி பொருட்கள் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தண்டையார்பேட்டை மருத்துவமனை முதல்கட்ட கரோனா தடுப்பூசி பணி தொடக்கம்