சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியைச் சேலம் மாவட்ட கல்வி அதிகாரி மதன்குமார் தொடங்கி வைத்தார்.
இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி , ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சி பொது அறிவியல், சமூகம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நாளை வரை நடைபெற உள்ளது. இங்கு ஸ்மார்ட் நகரம், தீ விபத்து எச்சரிக்கை , தானியங்கி நீர் கட்டுப்பாடு , கழிவுநீர் மேலாண்மை, ஸ்மார்ட் குப்பைத்தொட்டி, பூமியதிர்ச்சி அலாரம், நீர் ராக்கெட், எரிவாயு கசிவு காட்டி , உணவு அலாரம் உள்ளிட்ட 550 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பள்ளி மாணவ மாணவியர் காட்சிப் படுத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் கார்த்திகேயன் கூறுகையில்," கண்காட்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும், வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்படும் . மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாம் பரிசாக ரூ.3 000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் 20 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. அதேபோல, மிகச்சிறந்த கண்டுபிடிப்பு காட்சிப்படுத்தும் மாணவ மாணவியரில் ஒருவருக்குச் சிறந்த விஞ்ஞானி விருது, ரூபாய் 10 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
சேலம் கிழக்கு போக்குவரத்துத்துறை அதிகாரி தாமோதரன், சோனா கல்லூரி முதல்வர் செந்தில்குமார் உள்பட மாணவ மாணவியர் பலர் விழாவில் கலந்து கொண்டனர் .
இதையும் படிங்க: கடலாடிகளின் போராட்டங்கள் நெஞ்சுரத்தைத் தருபவை - இன்று உலக மீனவர்கள் தினம்!