சேலம் சூரமங்கலம் அசத் நகர் பகுதியில் ரபிக் ஜக்ரியா, தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ரபிக் சவுதியில் வேலை பார்த்துவந்த நிலையில், மூன்று மாத விடுமுறையில் சேலம் வந்துள்ளார். இவரது இளைய மகள் ஆயிஷா சுஹைனா அதே பகுதியில் இயங்கி வரும் தாருஸ்ஸலாம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் சகோதரருடன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி நுழைவு வாயிலில் இருந்து வகுப்பறை நோக்கி மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருக்கையில், பள்ளி வாகனம் பின்னோக்கி வந்தபோது எதிர்பாரா விதமாக சிறுமியின் மீது மோதியதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சிறுமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். மேலும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே பள்ளி வளாகத்திலேயே சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.