இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தாவிரவியல் துறை மாணவி நிவேதா பல்கலை மகளிர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையும் அதனை காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாகக் கூறி திசைதிருப்புவதாகவும் பேசப்பட்டது.
இதனால் மாணவியின் தற்கொலையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் பல்கலைக்கழக மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிராமப்புற தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியர் திறன் மேம்பாடு பெற்று பொருளாதார உயர்வு எட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் மாணவி தற்கொலை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, மாணவி தற்கொலை தொடர்பாக எனக்கு எந்த புகாரும் வரவில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி நிவேதாவின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்!