தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் - தலைவர் சரத்குமார் மாநிலம் தழுவிய அளவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார். அந்த வகையில் இன்று (ஜன.31) சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சேலம் மண்டல கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்குமார், "சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் தொடர்கிறது. அதிமுக கூட்டணியில் எங்களுக்கு எத்தனை இடங்கள் வேண்டும் என்பது குறித்து பின்னர் முறைப்படி அறிவிப்போம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று வேல் எடுத்த ஸ்டாலின் நாளை காவடியும் எடுப்பார். அவருக்கு திமுகவின் கொள்கையில் பிடிப்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன், நகைக் கடன் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்" என்று தெரிவித்தார்.