சேலம்: கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் சேலம், சிவதாபுரம் பகுதியில் சேலத்தாம்பட்டி ஏரி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிரம்பியது.
ஏரியில் வெளியேறும் உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் எம்ஜிஆர் நகர், இந்திரா நகர், அம்மன் நகர் முத்து நாயக்கர் காலனி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்து நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டில் இருந்து பொருள்களை வெளியேற்றி வருகின்றனர். குறிப்பாக சிவதாபுரத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் மழைநீர் சூழ்ந்து சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் சேலத்தாம்பட்டி ஏரியை தூர்வாரி, மாவட்ட நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எப்பொழுது மழை பெய்தாலும் ஊருக்குள் மழைநீர் புகுந்து ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொள்வதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அப்பகுதியில் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பட்டாசு கழிவுகளை தனியாக சேகரிக்க வேண்டும் - ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு!