சேலம் வி. பி. சிந்தன் நினைவு அரங்கத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின், பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கான ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சேலம் மண்டல டாஸ்மாக் தொழிலாளர்கள், சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஆயத்த கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவப்பிரகாசம், "தமிழ்நாடு அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்ட பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை கால தாமதமின்றி உடனே நிறைவேற்றப்பட வேண்டும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனசாக 30 விழுக்காடு தொகையை வழங்கிட வேண்டும். டாஸ்மாக் நிர்வாகம் விருப்பு வெறுப்பு அடிப்படையில் பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் ஆய்வுகளைக் கைவிட வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்களை ரூ . 50 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்திட வேண்டும். மாற்று துறை அலுவலர்கள் டாஸ்மாக் கடைகளில் நடத்தும் ஆய்வுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைக்கும் இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில், சேலம் மண்டல டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் போராட்டத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல் , கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர் " என்றார்.
இதையும் படிங்க... டாஸ்மாக் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளுமா அரசு?