இந்தியா முழுவதும் 100 பெருநகரங்கள் சீர்மிகு நகரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த நகரங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்துத் தரப்பட வேண்டும் என்று கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. இதற்காக தனியே இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சேலம் மாநகராட்சியும் சீர்மிகு திட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. மொத்தம் ரூ.945.15 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சேலம் நகராட்சிக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள், மாணவ - மாணவிகள் இணையதளம் வாயிலாகக் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஜெயராம் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் மருத்துவர் பார்த்திபன், கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், மாநகராட்சி தலைமை பொறியாளர் அசோகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் இணையதளம் மூலம் பொதுமக்கள் எவ்வாறு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள், மாணவ - மாணவிகள் அனைவரும் சேலத்தின் வளர்ச்சிக்காக கருத்துகளைத் தெரிவித்து, சேலம் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சந்தேகத்திற்கிடமான வகையில் சிறுமி மரணம்: திண்டுக்கல் அருகே சோகம்