சேலம் சின்னக்கடை வீதி பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இங்கு 100க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகளும் 200க்கு மேற்பட்ட சிறு வியாபாரிகளும் சாலை ஓரங்களில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் கடைகள் வைத்து பூ, பழங்களை விற்பனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் சின்னக்கடை வீதி பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளி உள்பட 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதையடுத்து கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்த மாநகராட்சி அலுவலர்கள் நேற்று (ஜூலை 2) நடவடிக்கை மேற்கொண்டனர் .
இதற்காக காலை முதலே சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி உடனடியாக கடைகளை காலி செய்ய உத்தரவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், அலுவலர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டை கோயில் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உரிய கால அவகாசம் வழங்காமல் உடனடியாக கடைகளை அப்புறப்படுத்த சொன்னால் வாங்கிய பொருள்களை விற்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் உரிய கால அவகாசம் அளித்தால் தங்கள் கடைகளை காலி செய்து கொள்வதாகக் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் அலுவலர்கள் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "கடந்த 20 நாள்களுக்கும் மேலாக கடைகளை மூடியதால் வாழ்வாதாரமே இழந்து தவித்துவந்தோம். தற்போது மாநில அரசு தளர்வுகளை அளித்தபின் கடைகளை நடத்தினோம்.
இந்தப் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளி உள்பட பலருக்கு கரோனா உறுதியானதால் கடைகளை மூடச்சொல்லி அலுவலர்கள் அவசரம் காட்டுவதாகவும் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி, அதன் பின்னர் கடைகளை அப்புறப்படுத்த சொன்னால் தங்களுக்கு வாழ்வதற்கான வழி பிறக்கும். ஆகவே அலுவலர்களின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கோரிக்கைவிடுத்தனர் .
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர். மாற்று இடம் வழங்கும்வரை சாலை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என வியாபாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க... தள்ளுவண்டிக் கடைகளை அப்புறப்படுத்திய காவல் துறை: வாக்குவாதத்தில் வியாபாரிகள்!