சேலம் மாவட்டம் ஓமலூர், கஞ்சநாயக்கன்பட்டி, திருமலைகிரி, தாரமங்கலம், வீராணம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மண்பாண்டத் தொழிலாளர்கள் மண்பாண்ட பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக கஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் இன்றளவும் அதிமாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஏரிகளிலிருந்து கிடைக்கும் சுத்தமான மிருதுவான களிமண்ணை எடுத்து, அதை தண்ணீரில் ஊறவைத்து, பல மணி நேரம் பதப்படுத்துகின்றனர்.
பின்னர் கால்களால் மிதித்தும், கைகளால் பிசைந்தும் களிமண் சரியான பதத்திற்கு வந்த பின்னர், சிறிய மின் மோட்டார் மூலம் சுழலும் வட்ட வடிவ மரத்தட்டில் களிமண்ணை வைத்து, கைகளால் சிறிய, பெரிய அளவிலான அகல் விளக்குகள், பூந்தொட்டி, பானை, அடுப்பு, தட்டு, கூஜா உள்ளிட்ட ஏராளமான பொருள்களை அழகுற கலைநயத்துடன் செய்துவருகின்றனர்.
ஒரு காலத்தில் வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் பெரும்பாலும் மண்பாண்டங்களாகவே இருந்ததோடு, அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் வைப்பதற்கும் பெரிய அளவிலான பானைகள் பயன்பட்டுவந்தன. ஆனால், காலப்போக்கில் எவர்சில்வர், அலுமினிய பாத்திரங்கள், எரிவாயு அடுப்புகள் என மாறிவிட்டனர்.
இருந்தபோதிலும், கோயில் திருவிழாக்கள், தைப்பொங்கல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அவ்வப்போது மண்பாண்டங்களை மக்கள் வாங்கி பயன்படுத்திவருகின்றனர். இருந்தாலும், மண்பாண்டத் தொழிலாளர்களின் விற்பனை மந்தமாகத்தான் இருந்தது.
இப்படி இருக்கும்பட்சத்தில், கடந்த மார்ச் மாதம் கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில்களும் மூடப்பட்டன. இதனால் திருவிழாக்கள் நடைபெறவில்லை, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மண்பாண்டத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக சென்ற ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கத்தால், குளிர்ச்சியான தண்ணீர் அருந்த அதிக அளவில் பானைகள் விற்பனையாகும். அதுவும் இந்த ஆண்டு தடைபட்டுபோனது என்பது இன்னொரு சோகம் என்கிறார்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள்.
கரோனா ஊரடங்குதான் இம்மக்களின் வாழ்வாதாரத்தை ஆட்கொண்டது என்றால், கார்த்திகை தீபத் திருநாளும் இவர்களுக்கு கைக்கொடுக்கவில்லை. கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்தாண்டு கார்த்திகை தீப விளக்கு விற்பனை குறைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் இம்மக்கள்.
இது குறித்து, கஞ்சநாயக்கன்பட்டி மண்பாண்டத் தொழிலாளர் ஈஸ்வரி கூறுகையில், “கடந்த காலங்களில் வியாபாரிகள் முன்கூட்டியே தேவையின் அடிப்படையில் கொடுக்கும் ஆர்டர்களுக்கேற்ப அகல் விளக்குகளை உற்பத்திசெய்து கொடுத்துவந்தோம்.
திருவண்ணாமலை உள்ளிட்ட பெரிய கோயில்கள் திறக்கப்படாத தற்போதைய நிலையில் அகல் விளக்குகள் தேவைக்கான ஆர்டர்கள் வரவில்லை. ஒரு சில சிறிய வியாபாரிகள் மட்டுமே எங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். அதுவும் விளக்கு ஒன்றிற்கு 30 காசு மட்டுமே கொடுக்கின்றனர்.
கரோனா பொதுமுடக்கம் எங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளான களிமண் கிடைப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எனவே இந்தத் தொழிலைக் காப்பாற்ற அரசு ஏதேனும் உதவிசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொற்றால் போடப்பட்டுள்ள ஊரடங்கால், அகல்விளக்கு, மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இதனால் இந்தக் குடிசைத்தொழிலை காக்க முன்வருமா அரசு?
இதையும் படிங்க...பாதுகாப்பாக வாழத்தானே வீடு கேட்கிறார்கள் பழங்குடியின மக்கள்... காப்பாற்றுமா அரசு?