சேலம்: சேலம் மாமாங்கம் அடுத்த அரபிக் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. பாமக சார்பில் நடத்தப்பட்ட இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து, திமுக எம்.பி தயாநிதி மாறன் தரக்குறைவாக பேசியதாக் கூறி அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என சேலம் பாமகவினர் அறிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று சேலம் ஓமலூர் பகுதியில் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு இரவு 10 மணிக்கு, தயாநிதி மாறன் சென்னை புறப்படுவதற்காக ரயில்வே நிலையம் சென்றுக்கொண்டிருந்தார் அப்போது அவரது காரை பின்தொடர்ந்து சென்ற திமுகவினரின் கார்கள் சாலையில் தக்காளி பாரம் ஏற்றி வந்த மினி ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
அதிவேகத்தில் திமுகவினரின் கார்கள் சென்ற காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறி பாமகவினர் அரபிக் கல்லூரி அருகே சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று (டிச.21) திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். மேலும் அவர்களது கார்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போராட்டகாரர்களை கலைக்க காவல் துறையினர் லேசாக தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தயாநிதி மாறன் நேற்று இரவு ரயில் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: 'அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ஆயிரம் கோடி பேரம்'- தயாநிதி மாறன்