சேலம்: நெத்திமேடு பகுதியில் உள்ள போலீசார் சமுதாய கூடத்தில் புலம் பெயர் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய செயலி (migrant care) அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று செயலியை அறிமுகப்படுத்தினார்கள். பின்னர் அதை பயன்படுத்தும் செயல் விளக்கத்தையும் வட மாநில தொழிலாளர்களுக்கு சேலம் காவல்துறை கமிஷனர் விஜயகுமாரி செய்து காண்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜயகுமாரி கூறுகையில், 'சேலத்தில் மட்டும் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் குறித்த முழு விவரங்களை அறிவதற்காகவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் புதியதாக செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலி மூலம் வட மாநில தொழிலாளர்கள் எங்கிருந்து வந்துள்ளனர். எந்தெந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். எத்தனை ஆண்டுகளாக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது அவர்கள் எங்கு வசித்து வருகிறார்கள் என்பது குறித்த முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. புதியதாக தொடங்கப்பட்ட இந்த செயலி மூலம் ஒவ்வொரு வட மாநில தொழிலாளரும் பாதுகாப்பாக இருக்கிறேன் அல்லது இல்லை என்ற 'பட்டன்கள்' மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற 'பட்டனை' அழுத்தினால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரும். இதே போல் ஏதேனும் உதவி தேவை, பாதுகாப்பாக இல்லை என்றால், இல்லை என்ற 'பட்டனை' அழுத்தினால் அலாரம் சவுண்ட் ஒலிக்கும். இதையடுத்து ரோந்து போலீசார் புகார் வந்த இடத்திற்கு உடனடியாக சென்று அங்குள்ள நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். இதற்காக தனி குழு அமைத்து 24 மணி நேரமும் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என ஆணையர் வியகுமாரி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் மாடசாமி ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நெத்திமேடு பகுதியில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சாலையில் நடந்து சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் வயது முதிர்ந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனிடையே சேலம் ஜான்சன் பேட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் புலம் பெயர் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு தற்போதைய சூழ்நிலைகளை கையாள அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் துணை கமிஷனர் மாடசாமி வழங்கினார்.
இதையும் படிங்க: பள்ளியை மேம்படுத்த முன்னாள் மாணவர்களை அணுகுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை!