சேலம் மாநகர் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்கள் எந்த தயக்கமின்றி புகார் அளிக்கும் வகையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பு பிரிவு ஏற்படுத்தி அதற்கென வரவேற்பு காவலரை நியமித்து புகார் மனு பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று சேலம் மாநகர காவல்துறை சார்பில் மனுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர காவல் ஆணையாளர் சங்கர் தொடங்கி வைத்தார். இதில், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார் மனுக்களை வழங்கினர்.
மேலும், இதுகுறித்து சேலம் மாநகர ஆணையாளர் காவல் ஆணையர் சங்கர் கூறியதாவது, சேலம் மாநகரில் குற்ற சம்பவங்கள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்று மனுதாரர் முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் தாங்கள் அளித்த மனுக்களின் மீதான விசாரணை திருப்தியில்லை என தெரிவித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது மீண்டும் மறுவிசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.