சேலம்: பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளம்முருகன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பரான கந்தசாமி என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கித் தருவதாகக் கூறி உள்ளார்.
இதனை நம்பி, தனக்கு ரூ.5 கோடி பணம் தேவைப்படுகிறது என்று கூறி உள்ளார். இந்நிலையில் ரூ.5 கோடிக்கு கமிஷன் தொகையாக ரூ.20 லட்சம் பணம் முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்று கூறி, ரூ.20 லட்சம் பணத்தை இளமுருகனிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், 20 ரூபாய் முத்திரைத்தாள்கள், கையெழுத்து இடப்படாத 20 வங்கி காசோலைகள் ஆகியவற்றை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களாகியும், பணம் கிடைக்காததால் இது குறித்து கந்தசாமியிடம் இளமுருகன் நேரடியாகச் சென்று கேட்டுள்ளார்.
ஆனால், அதற்கு கந்தசாமி உன்னிடமிருந்து பெற்ற முத்திரைத்தாள்கள், காசோலைகள் உள்ளிட்டவற்றை வைத்து பொய்யாக ஆவணங்களைத் தயார் செய்து புகார் அளித்து சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளமுருகன் புகார் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், 'ரூ.20 லட்சம் பணம், கையெழுத்திடப்படாத வங்கி காசோலைகள், முத்திரைத்தாள் பத்திரங்கள் ஆகியவற்றை வைத்து மிரட்டுகின்றனர். எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து கந்தசாமியிடம் இருந்து பணம் மற்றும் கையெழுத்திடப்படாத வங்கி காசோலைகள், 20 ரூபாய் முத்திரைத்தாள்கள், வெற்று ப்ரோ நோட்டுகள் ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல்" எடியூரப்பா அரசை குற்றம்சாட்டிய பாஜக எம்எல்ஏ.... கர்நாடக அரசியலில் பரபரப்பு!