சேலம் அடுத்த சிவதாபுரம் அருகில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் மழை நீர் தாழ்வான பகுதிகளில் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மழை காலங்களில் சாலை வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் நீரை திருமணிமுத்தாற்றில் கலந்து விடுவதற்கான சாத்திக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கூறுகையில்," மழைக்காலங்களில், சேலத்தாம்பட்டி ஏரிக்கு தளவாய்ப்பட்டி ஏரி உபரி நீரும், வளையப்பட்டி ஏரி உபரி நீரும் வருவதால் ஏரி அடிக்கடி நிரம்பி வழிகிறது. உபரி நீர் வெளியில் செல்வதற்கு ஏற்கெனவே, நீர் வழிப்போக்கிகள் அமைத்து வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் அது போதவில்லை.
இந்தநிலையில் மழைக்காலங்களில் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி சிவதாபுரம் பகுதியில் நீர் சாலையின் ஓரத்தில் உள்ள கால்வாயில் பெருகி சாலையில் வரக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, சேலத்தாம்பட்டி ஏரி நீர் வெளியேறி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் புகுவதை தடுப்பதற்கும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் மாற்று நீர்வழிப் பாதை அமைப்பது குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.