சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நாட்டாண்மை கட்டட வளாக முன்பு சேலம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் சிஏஏ, என்ஆர் சி, என்பிஆர் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், இச்சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றவேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜனநாயக ரீதியில் போராடிய இஸ்லாமிய பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட காவல் துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த முற்றுகை போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சேலம் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், சேலம் மக்களவை உறுப்பினர் பார்த்திபன், மக்கள் ஒற்றுமை மேடை குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், ஜமாஅத்துல் உலமா சபையினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த முற்றுகைப் போராட்டத்தால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: 'மக்கள் எழுச்சியை கருத்தில்கொண்டு சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' - தமிமுன் அன்சாரி