சேலம்: அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் மேல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறையில் இன்று (நவ. 22) காலை திடீர் மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியேறினர். மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 65 நோயாளிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அருகே உள்ள தனியார் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் அயோத்தியாப்பட்டிணம் அருகே உள்ள சின்னனூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 30) என்ற இளைஞர் விபத்து ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு தலைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு சதீஷ் உடல் நலம் தேறி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (நவ. 22) காலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த சதீஷ், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து அருகில் இருக்கும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதன்பிறகு, மதியம் இரண்டு மணி அளவில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷின் உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு முறையான விசாரணை நடத்தும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சதீஷ் உறவினர்கள் கூறுகையில், "தலையில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறி வந்த சதீஷ், தீ விபத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். ஆனால் மதியம் வரை அவர் சிகிச்சையில் இருந்தார்.
திடீரென மதியம் சதீஷ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் கடும் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்து உள்ளார். இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சபரிமலையில் மண்டல பூஜை: கொட்டும் மழையை பொருட்படுத்தாது பக்தர்கள் சாமி தரிசனம்..!