தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான போக்குவரத்து பணியாளர்களின் வைப்பு நிதி, விடுப்பு சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்காமல் தமிழ்நாடு அரசு அலைக்கழித்து வருகிறது.
இதனைக் கண்டித்து இன்று காலை சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு உழைத்த ஓய்வு பெற்ற எங்களுக்கு வழங்க வேண்டிய தொகைகளை வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி கொடுமை படுத்துகிறது.
இதனால் பல தொழிலாளர்கள் ஏமாற்றத்துடனும், மன உளைச்சலுடனும் வாழ்ந்து வருகின்றனர். பல தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். எனவே, உடனடியாக தமிழக அரசு 48 மாத சமூகநல பாதுகாப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பயன்கள் அனைத்தையும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.