சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சேகர் (32) என்ற இளைஞருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். மேலும் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து சேகரின் தந்தை அர்சுனன், தனது ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு தானமாக வழங்க முன்வந்தார்.
இதைத் தொடர்ந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட விதிகளின்படி கடந்த நவம்பர் 27ஆம் தேதி, அர்சுனனின் சிறுநீரகம் பெறப்பட்டு அதை அவரது மகன் சேகருக்கு சேலம் அரசு பொதுமருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக மாற்றி பொருத்தினர். இதையடுத்து தற்போது சேகரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.
மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனைத்துக் கருவிகளும் மாத்திரை மருந்துகளும் உள்ளதாகவும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சேலத்தில் மட்டும் 36 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு தேவை எனவும் மூளைச்சாவு அடையும் நபர்களின் உறவினர்கள் உறுப்பு தானம் அளிக்க முன் வரவேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.