சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவிற்குள்பட்டது வனகுண்டாமலை. இது சுமார் 1000 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மலையில் மரங்களும், முள்புதர்களும் அதிகளவில் நிறைந்துள்ளன.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையோரம் மலைப்பகுதி உள்ளதால், இன்று காலை சுமார் 11 மணியளவில் லாரி ஓட்டுநர் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க புகைப்பிடித்துக்கொண்டே சென்றுள்ளார். அப்போது, அவர் சிகரெட் துண்டை அணைக்காமல் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டதாகப் கூறப்படுகிறது.
பின்னர், அந்த சிகரெட் துண்டிலிருந்த நெருப்பு பெரிய தீ விபத்தாக மாறியது. இதனிடையே, மலையில் வறட்சி காரணமாக புற்கள் காய்ந்த நிலையில் இருந்ததால் காற்று பலமாக வீசியபோது தீ மளமளவென பரவியது. அடிப்பகுதியில் பற்றிய தீ உச்சிவரை கொளுந்துவிட்டு எரிந்தது.
இதனால், அப்பகுதியில் பெரும் புகைமண்டலம் உருவானது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சுமார் ஏழு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த திடீர் தீவிபத்து குறித்து வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவர் வேஷம் போட்ட பெண்: தக்க நடவடிக்கை எடுத்த போலீஸ்!