சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த அப்பமசமுத்திரம் அருகே உள்ள ராமநாயகன்பாளையம் காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன். இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பாஜகவின் இலக்கிய அணி சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு, இதற்காக பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விவசாயிகளுக்கு விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆத்தூர் காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகளும் உள்ளன. இதற்கிடையே தான், இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை தரப்பில் இருந்து, விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் சாதிப் பெயருடன் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் சென்னைக்கு சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அளித்த சம்மனில் விவசாயிகளின் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு பகுதியாக, மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத் தலைவர் மாரியப்பாண்டியன், அமலாக்கத்துறை அதிகாரிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "சேலம் மாவட்டத்தில் விவசாயிகளை மிரட்டும் நோக்கத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மேலும், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில், வேண்டுமென்றே அவர்களது சாதியைக் குறிப்பிட்டுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேலும் விவசாயிகள் கிருஷ்ணன், கண்ணன் ஆகியோரது நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக பொறுப்பாளர் குணசேகரன் என்பவர் செயல்பட்டு, அவரது தூண்டுதலின் பெயரில்தான் இது நடந்ததாகவும் தெரிகிறது. எனவே, குணசேகரன் மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யவும், கைது செய்யவும் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, அமலாக்கத்துறை அதிகாரிகளை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று தமிழர் விடுதலை களம் தலைவர் ராஜ்குமார் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "சேலம் மாவட்டத்தில் விவசாயிகளை மிரட்டும் நோக்கத்திலும் வேண்டுமென்றே அவர்களது சாதியைக் குறிப்பிட்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, மத்திய அரசு சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை சஸ்பென்ட் செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டு, அனுப்பிய சம்மனை திரும்பப் பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது விவகாரம்; விரைவில் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் - அண்ணாமலை