சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, இந்திய முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை அறிமுகப்படுத்தி பேசினர்.
பின்னர் பேசிய எஸ்.ஆர்.பார்த்திபன், "பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மத்தியில் ஆட்சியைப் பிடித்த பாஜக, எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சாமானிய மக்கள் பாதிக்கின்ற வகையில் மோடியின் ஆட்சி இருக்கிறது. விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. ஊழல் முழுதாக ஒழிக்கப்படவில்லை. மக்கள் விரோத நடவடிக்கைகளே நடைமுறையில் உள்ளன. எனவேதான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக, கடந்த 39 ஆண்டுகளுக்கு பிறகு திமுக சார்பில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன். முதலமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால் பாலங்கள் கட்டிடங்கள் சேலத்தில் வளர்ச்சி என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.