சேலம்: வேலூர் மாவட்டத்தில் நேற்று (அக். 6) தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து தாக்குதல் நடத்திய நபர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (அக். 7) மாவட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் உள்பட ஒன்பது மாவட்டங்களில் நேற்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது குடியாத்தம் அருகே இராமாலை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது அரசியல் கட்சியினர் சிலர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்ட செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும், இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க காவல் துறையும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
முன்னதாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட செய்தியாளருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை; யார் யார் குற்றவாளிகள்? உச்ச நீதிமன்றம் கேள்வி!