சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே அமைந்துள்ள வலசகல்பட்டி ஏரியின் தடுப்புச்சுவர் உடைந்து விடும் அபாயம் உள்ளதாக வந்த செய்தியை அடுத்து அம்மாவட்ட ஆட்சியர் வலகசகல்பட்டி ஏரியை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது, சுமார் 100ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வலசகல்பட்டி ஏரிக்கு, அருகில் இருக்கும் பச்சமலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் வழிந்து ஓடி வருவது வழக்கம்.
கடந்த இரண்டு மாதங்களாக பச்சமலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரியானது தனது முழு கொள்ளவான 62.69மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. தற்போது, ஏரி நிரம்பி அதன் உபரி நீர் வழிந்தோடியின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் உபரி நீரானது ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுவேதா நதியில் கலக்கின்றது.
பருவமழை வலுப்பெற்றுள்ள காரணத்தால் பச்சமலைப்பகுதியில் கனமழை பெய்து ஏரியிலிருந்து அதிகப்படியான நீர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே , ஏரியைச்சுற்றியுள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறுது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் தண்டாரோ, ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை,காவல்துறை, மாநில பேரிடம் மீட்புக்குழு பயற்சி பெற்ற 24காவலர்கள் அடங்கிய பேரிடர் மீட்பு பாதுகாப்புக் குழு தயார் நிலையில் வைக்கப்ப்பட்டுள்ளது.
வலசகல்பட்டி ஏரியிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் யாரும் ஏரி மற்றும் வழிந்தோடும் வாய்க்கால்களில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. மேலும், ஏரிகளில் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதையோ, செல்பி எடுப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏரியில் கழுத்தளவு நீரில் சடலத்தை தூக்கிச் சென்ற மக்கள் - மயானத்திற்குப் பாதை இல்லாத அவலம்!