சேலம் மாவட்டத்தில் உள்ள 1591 நியாய விலைக் கடைகள் மூலமாக 10 லட்சத்து 12ஆயிரத்து 249 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று (மே.15) முதல் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதில் ஒரு நாளைக்கு 200 அட்டைதாரர்கள் வீதம் டோக்கன்கள் வழங்கப்பட்டு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்ட கன்னங்குறிச்சி நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பாக கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர் ராமன் நிதியின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ராமன் கூறுகையில், 'சேலம் மாவட்டத்தில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டர் கொள்முதல் செய்யப்பட்டு, மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பிரித்து வழங்கப்பட்டதால், பற்றாக்குறை ஏற்பட்டது.
ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது சேலத்தில் உள்ள 45க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து வருமாறு கரோனா நோயாளியின் உறவினர்களிடம், தனியார் மருத்துவமனைகள் கட்டாயப்படுத்தியதாகத் தகவல்கள் வெளிவந்தன. எனவே, ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு வருமாறு தனியார் மருத்துவமனைகள் கட்டாயப்படுத்தக் கூடாது.
இனிவரும் காலங்களில் மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசிடம் 14 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜன், மாவட்டத்திற்கு வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு அரசு நிச்சயம் பரிசீலிக்கும். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஊரடங்கு நேரத்தில் சாலையில் அத்தியாவசியத் தேவைகள் இன்றி, சுற்றித் திரிபவர்கள் மீது காவல் துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூரில் 3 லட்சம் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!