தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகளவில் பரவி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் நோய்த்தொற்றைத் தடுக்கும்விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து, அதன்படி பேருந்துகளில் இருக்கைகளில் அமரும் அளவு மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில், அரசு உத்தரவை மீறி பல்வேறு பகுதிகளில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக சேலம் சுந்தர்லாட்ஜ் பகுதியில் துணை ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஊழியர்களுடன், பேருந்துகளில் பயணிகள் அதிகளவில் ஏற்றப்பட்டு உள்ளனரா, முகக்கவசம் அணிந்து உள்ளனரா என்பது குறித்து சோதனை மேற்கொண்டிருந்தார்.
அப்போது சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் தமிழ்நாடு அரசு அறிவித்த அளவைவிட அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார், அரசு பேருந்துகளுக்கு துணை ஆட்சியர், தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் இருந்த பயணிகளை எச்சரித்த அவர், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அரசு விதித்துள்ள விதிமுறைகள் பேருந்துகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் துணை ஆட்சியர் நேரில் ஆய்வுசெய்து அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நல்லது நடந்தால் சரி: மத்திய சுகாதாரத் துறையின் அழைப்பு குறித்து மதுரை எம்பி கருத்து