சேலம்: மாங்கனி மாநகரமான சேலம் 157 ஆண்டுகளை கடந்து இன்று (நவ. 01) 158வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சிக்கு அடுத்து 5வது பெரிய மாவட்டமாக சேலம் உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை குறித்து இந்த சிறப்பு செய்தித் தொகுப்பில் பார்ப்போம்..
நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட பகுதியை சைலம் என்று அழைப்பர். அதுவே காலப்போக்கில் சேலம் என மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. சேலம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழம் தான், எனவே இதனை மாங்கனி மாநகரம் என்றும் அழைப்பது உண்டு. மேலும் இரும்பு உருக்கு ஆலை உள்ளதால் இதற்கு ஸ்டீல் சிட்டி என்று மற்றொரு பெயரும் உள்ளது.
1792ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவான சேலம் மாவட்டம், ஆரம்பத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்த பகுதியாக இருந்தது. பின்னர் 1866ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி சேலம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலத்தின் சிறப்புகள் : 1937ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலத்தில் தான். கெட்டி முதலி அரசர்களால் உருவாக்கப்பட்ட தாரமங்களம் கைலாசநாதர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், குழந்தை இயேசு பேராலயம், திப்பு சுல்தான் கட்டிய ஜாமீய பள்ளிவாசல் உள்ளிட்டவை சேலத்தில் இருக்கும் சிறப்பு வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
அதேபோல் உலகின் மிக உயரமான முருகன் சிலை, 1,008 சிவலிங்கம் கோயில் உள்ளிட்டவை சேலத்தில் இருக்கும் சிறப்பு வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் ஆகும். பேசும் படங்கள் வரத்தொடங்கிய காலத்தில், சேலத்தில் இருந்து இயங்கிய "மாடர்ன் தியேட்டர்ஸ்" தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றியது.
முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி உள்ளிட்ட பல சினிமா பிரமுகர்களுக்கு ஆரம்பகால புகலிடமாக விளங்கியது சேலம். இங்கு ஜவ்வரிசி உற்பத்தி, கைத்தறி நெசவு, வெள்ளி கொலுசுகள் உள்ளிட்டவை பிரதான தொழில்களாக விளங்குகின்றன. அன்மையில் கூட சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா தலங்களை பொருத்தவரை சேலம் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, டெல்டா விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை மற்றும் பூங்கா, ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள குரும்பட்டி வன உயிரியல் பூங்கா, குட்டி கேரளா என அழைக்கப்படும் பூலாம்பட்டி உள்ளிட்டவை பிராதான சுற்றுலா தளங்கள் ஆகும். இத்தனை சிறப்பு அம்சங்களைக் கொண்டு இருக்கும் சேலம் மாவட்டம் தனது இன்று 158வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
இதையும் படிங்க: பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்... கடைசி தேதி எப்போ தெரியுமா?