சேலம்: தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது, சேலம் மாநகராட்சி. இங்கு சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி என்று நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சேலம் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் 15 முதல் 16 கோட்டங்கள் வரை உள்ளன. இந்த கோட்டங்களுக்கு ஒரு சுகாதார அலுவலர், ஒரு சுகாதார ஆய்வாளர் இருக்க வேண்டும். ஆனால், மண்டல அளவில் மட்டுமே ஒரு சுகாதார அலுவலரும்; 3 சுகாதார உதவி ஆய்வாளர்களும் இருக்கின்றனர். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஒவ்வொரு டிவிஷனிலும் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு என ஒரு (மேஸ்திரி) துப்புரவு மேற்பார்வையாளர் உள்ளார்.
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணி செய்ய வருவதில்லை. அவ்வாறு அவர்கள் வராமல் இருந்தாலும் அவர்களுக்கான முழு சம்பளம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நபரும் மாதம்தோறும் தலா 28 ஆயிரம் ரூபாய் முதல் 55 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள். இவர்களிடம் சுகாதார ஆய்வாளர் மாதம்தோறும் ரூபாய் 15 ஆயிரம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு முழு சம்பளம் கிடைக்க வழி செய்கிறார் என்று கூறப்படுகிறது. இதனைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என்று நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அதேபோல தூய்மைப் பணியில் தினக்கூலிகளாக பணி அமர்த்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு மூலம் சேர்ந்த பெண் தொழிலாளர்கள், சேலம் மாநகராட்சி முழுவதும் ஒவ்வொரு டிவிசனிலும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நாள்தோறும் இவர்களுக்கு கூலியாக ரூபாய் 429 வீதம் மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
ஒரு மாதத்திற்கு இவர்களுக்கு சுமார் 12,500 ரூபாய் ஊதியமாக கிடைக்கிறது. இதிலும் பாதிக்கும் மேற்பட்டோர் வேலைக்கு வராமலேயே சம்பளம் பெற்று வருகிறார்கள். அவ்வாறு வேலைக்கு வராத தூய்மைப் பணியாளர்களிடம் மாதம் ஏழாயிரம் ரூபாய், சுகாதார உதவி ஆய்வாளர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர், தூய்மை பணியாளர் சங்கத்தினர்.
இது தொடர்பாக நமக்கு பேட்டியளித்த சேலம் டிஸ்ட்ரிக்ட் கார்ப்பரேஷன் & முனிசிபல் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பி. என். பெரியசாமி கூறுகையில், “மாநகராட்சி நிர்வாகத்தில் ஊழல் முறைகேடுகள் மலைபோல் குவிந்துள்ளது. அதிலும், தூய்மைப் பணி செய்வோரிடம் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் நடத்தும் வசூல் வேட்டை, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் வகையில் உள்ளது.
இந்த முறைகேடுகளை களைய வேண்டிய நகர நல அலுவலரோ இதனைக் கண்டும் காணாமல் இருக்கிறார். சேலம் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு டிவிசனிலும் இருந்து மாதம்தோறும் 50 ஆயிரம் ரூபாய் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு, அது மேல் அதிகாரி மூலம் அந்தந்த டிவிசனின் கவுன்சிலருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது என்று சுகாதார உதவி ஆய்வாளர்கள் புலம்புகிறார்கள்.
அது மட்டுமல்லாது தூய்மைப் பணி செய்வதற்கு தேவையான கையுறை, துடைப்பம் உள்ளிட்ட உபகரணங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படுவது இல்லை. அந்தந்த தூய்மைப் பணியாளரே உபகரணங்களை தங்களது சொந்த செலவில் வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
மேலும் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களில் பெண் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லப்படக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களில் பெண் தூய்மைத் தொழிலாளர்களை அதிலும் வயது முதிர்ந்த தூய்மைப் பணி தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இதனால் உபகரணங்கள் இன்றி தூய்மைப் பணி செய்யும் தொழிலாளர்கள் பல்வேறு வகையான நோய்த் தொற்றுக்கு ஆளாகி பணிக்காலம் முடிவடைவதற்கு முன்பே, அகால மரணம் அடைந்து விடுகின்றனர். இந்த துயரங்களுக்கு மத்தியில் தான் தூய்மைப் பணியில் சேலம் மாநகராட்சி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அல்லல்பட்டு வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கென மாதம்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் மறந்து போய் உள்ளது. நிரந்தர தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடிக்கப்படும் சேமநலநிதி அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
அதேபோல, சேலம் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட 27 வகையான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் கடந்த 2016 - 2017ஆம் ஆண்டு முதல் பணியில் உள்ளனர். ஆண்டுக்கு 8 மாதங்கள் மட்டுமே இவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டு, நாள் ஒன்றுக்கு ரூபாய் 319 கூலியாக டெங்கு ஒழிப்புப் பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு இவர்களுக்கான தினக்கூலி 429 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூபாய் 319 மட்டுமே மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
இதிலும் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளன. மேலும் இவர்களுக்கான பி.எஃப்., இ.எஸ்.ஐ. பிடித்தம் ஆகியவற்றிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாகவும் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. வாரிசு அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களை ஓட்டுநர்களாக நியமிக்க தலா ரூபாய் 25 ஆயிரம் லஞ்சமாக பெற்றுக்கொண்டு சுகாதார உதவி ஆய்வாளர்கள் பணி வழங்கி உள்ளனர்.
தொகுப்பு ஊதிய முறையில் இருந்து பணி நிரந்தரம் செய்யப்பட்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களின் சி.பி.எஸ். பணம் திருப்பி வழங்கப்படவில்லை. அவர்களின் பணம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என மாநகராட்சி நிர்வாகமே மழுப்புகிறது. இதனால் 400 பேர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர், அதில் பலர் இறந்தும் விட்டனர்.
எனவே, புதிய சேலம் மாநகராட்சி கமிஷனர் ஆக பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் சீ.பாலசந்தர் ஐ.ஏ.எஸ். உரிய நடவடிக்கை எடுத்து தூய்மைப் பணியாளர்களின் துயரத்தைப் போக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் உள்ள தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு டிவிசனிலும் சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலுக்கு நான் ரெடி..! புது வாகனத்தில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி