பொதுமக்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு தற்போது பல்வேறு தளர்வுகளுடன் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களும் செயல்பட அனுமதித்துள்ளது.
கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக கடைகள், வணிக நிறுவனங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டி நிலையான இயக்க நடைமுறைகள் வெளியிடப்பட்டு, அவ்விதி முறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்து தொற்று நோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சேலம் மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டல பகுதிகளில் செயல்பட்டுவரும் அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள், தங்களின் நுழைவாயில்களில் வாடிக்கையாளர்கள், பணியாளர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையினை பரிசோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்.
மேலும் நுழைவாயில்களில் கை கழுவுவதற்கான வசதிகள், கைகளைச் சுத்தம் செய்வதற்கான சுத்திகரிப்பானை வைக்க வேண்டும். பொதுமக்கள் கைகளைச் சுத்தப்படுத்தி கொண்ட பின்னரே கடைகளுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.
முகக்கவசமின்றி வரும் பொதுமக்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. பணியாளர்கள் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னதாக கண்டிப்பாகக் கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் பணிகளின்போது கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும்.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தே பணிகள் மேற்கொள்ள வேண்டும். கடைக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியினைப் பின்பற்றினால் மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டும்.
பணியாளர்களுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருப்பின் சம்மந்தப்பட்டவர்களுக்கு கட்டாயம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ அறிவுரையினைப் பின்பற்றிட வேண்டும். அவர்களை எக்காரணத்தைக் கொண்டும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
மேலும், கிருமிநாசினி கொள்முதல் செய்யப்பட்ட விவரம், அவற்றை தினசரி பயன்படுத்திய விவரங்கள் குறித்த பதிவேடு ஒன்று பராமரிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள மேற்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி மாநகரப் பகுதிகளிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுகிறதா எனக் கண்காணிப்பதற்கு, மாநகராட்சி அலுவலர்களைக் கொண்ட சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினரின் திடீர் ஆய்வின்போது மேற்கண்ட விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகள்/நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு மட்டுமின்றி தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் தடுப்புச் சட்டம் 1897இன் கீழ் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.