கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள நகைக்கடையில் ஐந்து பேர் கொண்ட வடநாட்டு கொள்ளை கும்பல் ஒன்று 3.5 கிலோ தங்க நகையைத் திருடிவிட்டு தமிழ்நாட்டிற்குத் தப்பித்துச் சென்றது. இது குறித்து கேரள காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் கோவை, சேலம், தருமபுரி மாவட்ட காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின்போது பத்தினம்திட்டா திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கணபதி யாதவ், பிரசாத் யாதவ், தாதாசாகிப் உள்ளிட்ட நான்கு பேர் கையும், களவுமாகப் பிடிபட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை நித்தின் யாதவ் என்பவர் எடுத்துக்கொண்டு தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
பின்னர் சேலம் காவல்துறையினர் மாநகரம் முழுவதும் நடத்திய தீவிர சோதனையில், நித்தின் யாதவ் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை காவல் ஆணையர் ரங்கதுரை தலைமையிலான கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தின் யாதவை மூன்றரை கிலோ தங்க நகைகளுடன் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
கொள்ளை கும்பலை விரைந்து கைது செய்த சேலம் கொண்டலாம்பட்டி காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் பாராட்டினார். மேலும், இச்சம்பவம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.