சேலம் மாநகர காவல் துறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்நிகழ்வை சேலம் மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்து பேசிய சேலம் மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார், “தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ளது. வெயிலின் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், கடமையாற்றும் சேலம் போக்குவரத்துக் காவலர்களுக்கு ஆண்டுதோறும் சேலம் மாநகர காவல் துறை சார்பில் சோலார் தொப்பி, கண்ணாடி, எலுமிச்சை பழச்சாறு, நீர் மோர் ஆகியவை வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டு இன்று முதல் சேலம் மாநகரத்தில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மேற்கூறியவை வரும் ஜூன் மாதம் வரை தொடர்ந்து வழங்கப்படும்.
சேலம் மாநகரில் 125 போக்குவரத்து காவலர்களுக்கு வெப்பத் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு ஆணையர் செந்தில்குமார் இனிப்புகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சேலம் மாநகர துணை ஆணையர் செந்தில், போக்குவரத்து காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!