சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ’மை சேலம் ஆப்’, என்ற ஸ்மார்ட் ஃபோன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியரின் நிகழ்வுகள், செய்திக் குறிப்புகள் , புகைப்படங்கள் ஆகியவை தினமும் பதிவேற்றப்படும். மேலும், சேலம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் தொடர்பு எண்கள் இமெயில் முகவரிகள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் பதிவு செய்யப்பட்டுஉள்ளன.
துறை ரீதியிலான அலுவலர்களின் தொடர்பு முகவரிகள், எண்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதால் பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை அலுவலர்களுக்குத் தெரிவிக்க வசதியாக இருந்தது. ஆனால், செயலியில் தற்போதைய எம்.பி பார்த்திபனின் பெயரில்லாமல், முன்னாள் எம்.பி பன்னீர்செல்வத்தின் பெயரும், தொடர்பு எண்களும் உள்ளன.
மேலும், முன்னாள் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், புதிய மாவட்ட ஆட்சியராக ராமன் நியமிக்கப்பட்டார். ஆனால், செயலியின் முகப்பில் ரோகிணியின் புகைப்படங்களுடன் குறிப்புகள் உள்ளது. அலுவலர்களின் இந்த அலட்சியம் செயலியைப் பயன்படுத்துவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.